அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்!
புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.
புவனி - நிலவுலகம்
அவமே - வீணே
உய்ய - கடைத்தேற
கொள்கின்றவாறு - கொள்கின்ற ஆறு - ஆட்கொள்கின்ற இடம்; ஆறு - இடம், வழி
மலரவன் - நான்முகன்
அலர்ந்த - விரிந்த, பரந்த
அவனி - நிலவுலகம்
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே!
`நிலவுலகில் போய்ப் பிறவாமையினால் நாம் வீணே நாள்களைக் கழிக்கின்றோம்; இந்த நிலவுலகானது அனைவரும் கடைத்தேறுமாறு சிவபெருமான் ஆட்கொண்டு அருளும் இடம்' என்று கருதித் திருமாலாகிய அவன் விருப்பம் கொள்கின்றான். நான்முகனும் அவ்வாறே ஆசைப்படுகின்றான்.
உம்முடைய விரிந்த நிலைபேறுடைய திருவருளும் நீருமாக நிலவுலகில் எழுந்தருளிவந்து எங்களை ஆட்கொண்டருளும் வல்லவரே!
அரிய அமுதம் நிகர்த்தவரே!
திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வீராக!
திருச்சிற்றம்பலம்


0 comments:
Post a Comment