Wednesday, January 20, 2010

இன்பமடா இன்பம்!

gf01

அன்புடையான் விரலளைய
     அலையுநங்கை கருங்குழல்போல்
தென்காற்றில் அசைந்தாடும்
    தேமரத்தின் இலைகளினால்
        இன்பமடா இன்பம் - பேர்
        இன்பமடா இன்பம்!

காதலியர் காதலுரை
     கழறுவது போல்மலையின்
மீதிருந்து நெளிந்துவந்து
     மெலநகைக்கும் ஓடைகளால்
        இன்பமடா இன்பம் - பேர்
        இன்பமடா இன்பம்!

சிறுகுழவி இமையெனவே
     சிரிக்குமெழில் இதழ்களிலே
நறுவண்ணம் தேக்கிவைத்து
     நாற்றமளி மலர்களினால்
        இன்பமடா இன்பம் - பேர்
        இன்பமடா இன்பம்!

வான்விசும்பு பசும்வண்ணம்
     வரப்பெற்றுப் பார்மீது
தான்வந்து தவழ்வதுபோல்
     தழைக்கின்ற புல்வெளியால்
        இன்பமடா இன்பம் - பேர்
        இன்பமடா இன்பம்!

பெண்ணணங்கு நீள்குழலில்
     பேரல்லி பூத்தாற்போல்
வெண்முகிலின் திரள்சூடி
     வீற்றிருக்கும் வெற்புகளால்
        இன்பமடா இன்பம் - பேர்
        இன்பமடா இன்பம்!

(அரும்பு - ஆகஸ்டு 1962) 

0 comments:

Post a Comment

உலகத்தார் உண்டென்ப(து) இல்என்பான் வையத்து அலகையா வைக்கப் படும். (850)

(உலகத்தார் உண்டு என்று சொல்வதனை இல்லை என்று கூறுபவன் உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதப்படுவான்.)

  © Template by Ourblogtemplates.com 2008

Back to TOP