Wednesday, January 13, 2010

கண்ணகத்தே நின்று களிதரு தேனே!

tvp61ஒன்பது:

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
     விழுப்பொரு ளேஉன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
     வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
     கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயிர் ஆனாய்
     எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

நண்ணவும் - அணுகவும்
விழுப்பொருள் - மேலான பொருள்
உன - உன், உன்னுடைய
தொழுப்படியோங்கள் - தொழுப்பு அடியோங்கள் - தொழும்பு அடியோங்கள் – தொழும்பு - தொண்டு, அடியோங்கள் - அடியவர்களாகிய நாங்கள்: (`தொழும்பு' என்னுஞ் சொல் `தொழுப்பு' எனத் திரிந்தது.)
வண் - வண்மை, வளப்பம்
வழி - வழிவழி, பரம்பரை
களி - களிப்பு, இன்பம்
விரும்பு - விரும்பும், அன்பு செலுத்தும்
எண் - எண்ணம், உள்ளம்

விண்ணுலகில் உள்ள தேவர்களும் அணுகவும் இயலாத மேலான பொருளே!

உமக்குத் திருத்தொண்டு செய்யும் அடியவர்களாகிய எங்களை மண்ணுலகில் வந்து வாழச் செய்தவரே!

வளப்பம் மிகுந்த திருப்பெருந்துறையில் கோயில் கொண்டிருப்பவரே!

வழிவழி அடியவர்களாகிய எங்களின் கண்களிடத்தே அகலாது நின்று இன்பத்தைத் தருகின்ற தேன் போன்றவரே!

அருட்கடலில் விளைந்த அமுதம் நிகர்த்தவரே!

இனிய கரும்பு போன்றவரே!

அன்பு செலுத்தும் அடியவர்கள் உள்ளத்துள் நீங்காது இருப்பவரே!

உலகுக்கு உயிர் ஆனவரே!

எம்பெருமானே, திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வீராக!

0 comments:

Post a Comment

உலகத்தார் உண்டென்ப(து) இல்என்பான் வையத்து அலகையா வைக்கப் படும். (850)

(உலகத்தார் உண்டு என்று சொல்வதனை இல்லை என்று கூறுபவன் உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதப்படுவான்.)

  © Template by Ourblogtemplates.com 2008

Back to TOP