Sunday, January 10, 2010

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்...!

tvp55ஆறு:

பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்
     பந்தனை வந்தறுத் தார்அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
     வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
     திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப்பு அறுத்தெமை ஆண்டருள் புரியும்
     எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
 

பப்பு - பரப்பு, உலகம்; இடைக்குறை
வீட்டிருந்து - ஒழித்திருந்து, விட்டிருந்து
பந்தனை - கட்டு, தளை
அறுத்தார் - இல்லாமல் செய்தவர்கள், நீக்கியவர்கள்
மைப்புறு - மை தீட்டப்பெற்ற
கண்ணியர் - கண்களை உடையவர்கள்: பெண்கள்
மானுடத்து இயல்பின் - மனித இயல்புப்படி; இயல்பு - ஒழுக்கம்; இறைவரை வணங்குதல் மாந்தர் இயல்பு ஆதலால் இதுவே மாந்தர் இலக்கணம் ஆகும்
அணங்கு - உமையம்மை
செப்புறு - சிவப்பு நிறமான; செப்பு - சிவப்பு

உலகப்பற்று அறுமாறு அதனை ஒழித்திருந்து உண்மை உணரும் உம் மெய்யடியார்கள் உம்மை நாடித் தங்கள் பிறவி என்னும் கட்டை அறுத்தார்கள்; அவர்கள் அனைவரும் உம்மை வணங்குகிறார்கள்.

மை தீட்டப்பெற்ற கண்களை உடைய பெண்கள் மாந்தர் இயல்புப்படி உம்மை வணங்குகிறார்கள்.

உமையம்மையின் தலைவரே!

செந்தாமரைகள் மலர்கின்ற குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே!

இந்தப் பிறப்பினை இல்லாமல் செய்து எங்களை ஆட்கொண்டு திருவருள் புரியும் எம்பெருமானே!

திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வீராக!

0 comments:

Post a Comment

உலகத்தார் உண்டென்ப(து) இல்என்பான் வையத்து அலகையா வைக்கப் படும். (850)

(உலகத்தார் உண்டு என்று சொல்வதனை இல்லை என்று கூறுபவன் உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதப்படுவான்.)

  © Template by Ourblogtemplates.com 2008

Back to TOP