போக்கிலன் வரவிலன்...!
பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
பூதங்கள் - நிலம், நீர், தீ, காற்று வெளி எனும் ஐம்பூதங்கள்
போக்கிலன் - போக்கு இலன் - இறப்பு இல்லாதவன், முடிவு இல்லாதவன்
வரவிலன் - வரவு இலன் - பிறப்பு இல்லாதவன், தொடக்கம் இல்லாதவன்
புலவோர் - மெய்யறிவாளர்கள்
சீதங்கொள் - சீதம் கொள் - சீதம் - குளிர்ச்சி
ஏதங்கள் - குறைபாடுகள்
நிலம், நீர், தீ, காற்று வெளி எனும் ஐம்பூதங்கள்தோறும் பிரிவின்றி நிற்கின்றீர் என்றும் தொடக்கமும் முடிவும் இல்லாதவர் நீர் என்றும் மெய்யறிவாளர்கள் உம்மைப் போற்றித் திருப்பாடல்கள் பாடுவதையும் உள்ளம் நெகிழ்ந்து ஆடுவதையும் அறிவோமே அல்லாமல் உம்முடைய முழுத்தன்மையையும் கண்டறிந்தவர்களை நாங்கள் கேட்டு அறிந்ததும் இல்லை.
குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறை அரசே!
சிந்தித்து உணர்வதற்கும் அரியவரே!
எங்கள் முன் எழுந்தருளிவந்து எங்கள் குறைபாடுகளை இல்லாமற்செய்து எங்களை ஆட்கொண்டு திருவருள் புரியும் எம்பெருமானே!
திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வீராக!


0 comments:
Post a Comment