Friday, January 08, 2010

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்!

tvp51நான்கு:

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
     இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
     தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
     திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
     எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

இருக்கு - இருக்கு மறை
தோத்திரம் - புகழ்ப்பாடல்
துன்னிய - நெருங்கிய
பிணைமலர் - தொடுக்கப்பட்ட மலர்மாலைகள்
சென்னி - தலை
அஞ்சலி - கும்பிடுதல்

இனிய இசை வழங்கும் வீணை மீட்டுபவர்களும் யாழ் மீட்டுபவர்களும் ஒருபுறம் நின்று இசையெழுப்புகின்றனர்.

இருக்கு மறையும் திருமுறையும் ஓதுபவர்கள்  ஒருபுறம் நின்று பாடிப் பரவுகின்றனர்.

நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட மலர்மாலைகளைக் கையில் ஏந்தியவர்கள் ஒருபுறம் இருக்கின்றனர்.

தொழுபவர்களும் அன்புப் பெருக்கால் அழுபவர்களும் இன்பப் பெருக்கால் துவளுபவர்களும் ஒருபுறம் உள்ளனர்.

தலையின்மேல் கைகூப்பிக் கும்பிடுபவர்கள் ஒருபுறம் நிற்கின்றனர்.

திருப்பெருந்துறையில்  வீற்றிருக்கும் சிவபெருமானே!

எளியவனான என்னையும் ஆட்கொண்டு இனிய திருவருளைத் தந்தருளும் எம்பெருமானே!

திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வீராக.

0 comments:

Post a Comment

உலகத்தார் உண்டென்ப(து) இல்என்பான் வையத்து அலகையா வைக்கப் படும். (850)

(உலகத்தார் உண்டு என்று சொல்வதனை இல்லை என்று கூறுபவன் உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதப்படுவான்.)

  © Template by Ourblogtemplates.com 2008

Back to TOP