Thursday, January 07, 2010

கூவின பூங்குயில்...!

tvp49மூன்று:

கூவின பூங்குயில் கூவின கோழி
     குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளிஒளி உதயத்து
     ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாள்இணை காட்டாய்
     திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக்கு எளியாய்
     எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

கோழி - சேவல்
குருகுகள் - பறவைகள்
ஓவின - ஒளி மங்கின
தாரகை - விண்மீன்
ஒளி ஒளி - கதிரொளி; ஒளி - கதிரவன்
ஒருப்படுகின்றது - ஒன்றிக்கிறது, ஒன்றுகூடுகிறது
தேவ - தேவா, இறைவா
நற்செறி - நன்மை தரும் நெருங்கிய
யாவரும் அறிவரியாய் - `அறிவால் மட்டுமே ஆராய்ந்து அறிந்துவிடுவோம்' என்று செருக்கோடு முனைபவர்கள் எவராயினும் அவரால் அறிந்துகொள்ள முடியாதவனே
எமக்கு எளியாய் - அன்பு வழியிலும் அன்பை அடிப்படையாய்க் கொண்ட அறிவு வழியிலும் நிற்பதனால் எங்களுக்கு எளிவந்து அருள்பவனே

இன்குரலுடைய குயில்கள் கூவின.

சேவல்கள் கூவின.

பறவைகள் இன்னோசை எழுப்பின.

சங்குகள் முழங்கின.

விண்மீன்களின் ஒளி மங்கியது.

கதிரவன் ஒளி விடியலுக்கு ஒன்றுகூடித் தோன்றுகிறது

இறைவரே, நன்மை தரும் நெருங்கிய கழலணிந்த திருவடிகள் இரண்டினையும் பேரன்போடு எங்களுக்குக் காட்டி அருள்வீராக.

திருப்பெருந்துறையில்  வீற்றிருக்கும் சிவபெருமானே!

எவராயினும் அறிவதற்கு அரியவராக விளங்குபவரே!

எங்களுக்கு எளிவந்து அருள்பவரே!

எம்பெருமானே, திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வீராக!

0 comments:

Post a Comment

உலகத்தார் உண்டென்ப(து) இல்என்பான் வையத்து அலகையா வைக்கப் படும். (850)

(உலகத்தார் உண்டு என்று சொல்வதனை இல்லை என்று கூறுபவன் உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதப்படுவான்.)

  © Template by Ourblogtemplates.com 2008

Back to TOP