இருள்போய் அகன்றது...!
அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே.
அருணன் - கதிரவன்
இந்திரன் திசை - கிழக்குத்திசை, கீழ்த்திசை
உதயம் - விடியல்
நயனம் - கண்
கடிமலர் - மணமுள்ள மலர்; கடி - மணம்
அண்ணல் அம் கண் - சிறந்த அழகிய கண்
திரள் - கூட்டம்
நிரை - ஒழுங்கு
அறுபதம் - வண்டு
முரல்வன - ஒலிப்பன, இசைப்பன
இவை ஓர் - இவற்றை நினை
நிதி - செல்வம்
கதிரவன் கிழக்குத்திசை அணுகினான்.
இருள் அகன்று போனது.
தாமரை மலர்போலும் உம் திருமுகத்தில் விளங்கும் திருவருள்போன்று விடியலைத் தரும் கதிரவன் எழுந்தோறும் கண்ணனைய மணமுள்ள மலர்கள் மலர்கின்றன.
மேலும் சிறந்த அழகிய கண்களைப்போல் காணப்படும் வண்டுகள் கூட்டமாகவும் ஒழுங்காகவும் இசை பாடுகின்றன.
இவற்றை எல்லாம் நினைந்தருள்வீராக.
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே!
திருவருளாகிய பெருஞ்செல்வத்தைத் தந்தருளும் இன்பமலை போன்றவரே!
அலைகளை உடைய அருட்பெருங்கடல் ஒத்தவரே!
திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வீராக!


0 comments:
Post a Comment