போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்!
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.
போற்றி - புகழ்மொழி
ஆதி - முதல், தொடக்கம்
போகம் - நுகர்வு, அனுபவம்
ஈறு - இறுதி, முடிவு
இணை - இரண்டு
புண்டரிகம் - தாமரை
பொன் - அழகு, அழகிய
உய்ய - உய்திபெற, கடைத்தேற
அனைத்துக்கும் முதலாகிய உம் திருவடி மலர்கள் எங்களுக்கு அருள்புரிய வேண்டுமெனப் போற்றுகின்றோம்.
அனைத்துக்கும் முடிவாகிய உம் செம்மையான தளிர்போலும் திருவடிகள் எங்களுக்கு அருள்புரிய வேண்டுமெனப் போற்றுகின்றோம்.
எல்லா உயிர்களுக்கும் தோற்றமாக விளங்கும் பொன்போன்ற திருவடிகளைப் போற்றுகின்றோம்.
எல்லா உயிர்களுக்கும் வாழ்க்கை நுகர்வு அருளும் அழகிய திருவடிகளைப் போற்றுகின்றோம்.
எல்லா உயிர்களுக்கும் இறுதி இடமாகிய இரு திருவடிகளைப் போற்றுகின்றோம்.
திருமாலும் நான்முகனும் காண இயலாத் திருவடித் தாமரை மலர்களைப் போற்றுகின்றோம்.
நாங்கள் கடைத்தேறுமாறு ஆட்கொண்டு அருள்புரியும் அழகிய மலர்போலும் திருவடிகளைப் போற்றுகின்றோம்.
இவ்வண்ணம் இறைவரைப் போற்றி வணங்கி நாம் மார்கழி நீர் ஆடுவோமாக.
திருச்சிற்றம்பலம்


0 comments:
Post a Comment