Sunday, January 03, 2010

எங்கெழிலென் ஞாயிறு...?

tvp41பத்தொன்பது:

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.
 

அடைக்கலம் - அடைக்கலப்பொருள்
புதுக்கும் - புதுப்பிக்கும்
பணி - தொண்டு
கங்குல் - இரவு
இப்பரிசு - இவ்வாறு, இத்தன்மை
எங்கோன் - எம் கோன் - எங்கள் தலைவன்
நல்குதியேல் - அருளுவாய் எனில்
எங்கெழிலென் - எங்கு எழின் என் - எங்கு எழுந்தால் என்ன; எழின் - எழுந்தால், உதித்தால்
ஞாயிறு - கதிரவன்

எங்கள் பெருமானே, `உன்னிடம் ஒப்படைக்கப்படும் பிள்ளை உன் அடைக்கலப் பொருள்' என்று சொல்லப்படும் அந்தப் பழஞ்சொல்லைப் புதுப்பித்துச் சொல்லும் அச்சத்தால்   உம்மிடத்துப் பணிவாக ஒன்று தெரிவித்துக்கொள்கிறோம்;  கேட்டருள்வீராக!

உம் அடியவர் அல்லாதாரை நாங்கள் மணம்புரிந்து கொள்ளக்கூடாது.

எங்கள் கைகள் உமக்கு அன்றி வேறு தேவர்க்கு எந்தத் தொண்டும் செய்யாது இருக்கட்டும்.

இரவும் பகலும் எங்கள் கண்கள் உம்மை அன்றி வேறொன்றையும் காணாது இருக்கட்டும்.

எங்கள் தலைவராகிய நீர் இவ்வுலகில் இவ்வாறே எங்களுக்கு அருள்செய்வீர் எனில் கதிரவன் எந்தத் திசையில் எழுந்தால் எங்களுக்கு என்ன? (எங்களுக்கு ஒரு குறையும் வாராது.)

0 comments:

Post a Comment

உலகத்தார் உண்டென்ப(து) இல்என்பான் வையத்து அலகையா வைக்கப் படும். (850)

(உலகத்தார் உண்டு என்று சொல்வதனை இல்லை என்று கூறுபவன் உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதப்படுவான்.)

  © Template by Ourblogtemplates.com 2008

Back to TOP