Friday, January 01, 2010

எங்கும் இலாததோர் இன்பம்...!

tvp37பதினேழு:

செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.

செங்கணவன் – செங்கண்ணவன் - சிவந்த கண்களை உடையவன், திருமால்
திசைமுகன் - நான்முகன்
நம்பாலதா - நம்மிடத்து ஆகுமாறு
கொங்கு - பூந்தாது, மணம்
கொங்குண் - கொங்கு உண் - பூந்தாது பொருந்திய, மணம் நிறைந்த
நந்தம்மை - நம்மை
கோதாட்டி - செம்மைப்படுத்தி
சேவகன் - காவலன்
அங்கண் - அழகிய அருள்நோக்கம்
அரசு - தலைவன்
நங்கள் - நம்
நலம் - நன்மை

பூந்தாது பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே, திருமாலிடத்தும் நான்முகனிடத்தும் வேறு தேவர்களிடத்தும் மற்று எவ்விடத்தும் இல்லாததாகிய ஒப்பற்ற பேரின்பம் நம்மிடத்து உண்டாகுமாறு நம்மைச் செம்மைப்படுத்துபவர்.

இங்கே நம் இல்லந்தோறும் எழுந்தருளித் தம் செந்தாமரைபோலும் பொன்னடிகளைத் தொழும் பெரும்பேற்றைத் தந்து அருள்புரிகின்ற காவலர்.

அழகிய அருள்நோக்கம் உடைய தலைவர்.

அடியவர்களாகிய நமக்குக் கிடைத்த அரிய அமுதம் போன்றவர்.

நம் இறைவர்.

இத்தகு சிவபெருமானைப் புகழ்ந்து பாடி நன்மைகள் சிறக்குமாறு தாமரை மலர்கள் நிறைந்த நீரில் பாய்ந்து ஆடுவோமாக!

0 comments:

Post a Comment

உலகத்தார் உண்டென்ப(து) இல்என்பான் வையத்து அலகையா வைக்கப் படும். (850)

(உலகத்தார் உண்டு என்று சொல்வதனை இல்லை என்று கூறுபவன் உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதப்படுவான்.)

  © Template by Ourblogtemplates.com 2008

Back to TOP