ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே...!
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.
ஓரொருகால் - ஒவ்வொரு வேளை, ஒரோவொரு வேளை
வாயோவாள் - வாய் ஒழியாள்
களிகூர - மகிழ்ச்சி மிக
ஓவா - இடையறாமல்
வந்தனை - வணக்கம்
பேரரையற்கு - பேரரசனுக்கு
பித்து - பேரன்பு
வித்தகர் - அறிவுருவர், அறிவு வடிவானவர்
வார் - கச்சு
ஏர் - அழகு
ஒவ்வொரு வேளையிலும் `எம்பெருமான்' என்று பலமுறை நம் பெருமானுடைய சிறப்பை ஒருபொழுதும் வாய் ஒழியாமல் சொல்லிக்கொண்டே இருப்பாள்.
உள்ளத்தில் மகிழ்ச்சி மிகுந்து இடையறாது பொழியுமாறு கண்களில் தாரை தாரையாக நீர் பெருக நிலத்தில் ஒரே முறையாக வீழ்ந்து எழாமல் வணங்குவாள்.
பரம்பொருளை அன்றி வேறு தேவர்களை வணங்கமாட்டாள்.
பேரரசராகிய சிவபெருமானுக்கு ஒருவர் பேரன்பு உடையவராக ஆகுதல் இவ்வாறே ஆகும்.
இவ்வண்ணம் யாரொருவர் ஆவர்?
கச்சணிந்த பெண்களே, நம்மை ஆட்கொள்ளும் அறிவுருவராகிய சிவபெருமானின் திருவடிகளை வாயாரப் புகழ்ந்து பாடி அழகிய தோற்றமுள்ள மலர்கள் மிகுந்த பொய்கையில் மூழ்கி நாம் நீராடுவோமாக!


4 comments:
temple photos are good.
regards
ram
www.hayyram.blogspot.com
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//temple photos are good.//
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
SUPER
Thiruvadhira NaLil walla Thiruvempaavai paatal
NanRi
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//Thiruvadhira NaLil walla Thiruvempaavai paatal//
திருவெம்பாவைத் திருப்பாடல்களை அடுத்துத் திருப்பள்ளியெழுச்சித் திருப்பாடல்கள் தொடரும் ஐயா.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
Post a Comment