ஏ!
இருள்பிறங்கும் அடவிநடு வேகிணற்றில் பிறந்துவளர்ந்
திருந்தஒரு சிறிய தவளை
இமிழ்கடலைத் தன்கிணற்றின் இயல்பினதாய் அளவினதாய்
எண்ணியுரை செய்த செயலாய்
மருள்பிறங்கும் புல்லியஓர் மதியீனன் எலாமறிந்த
மாமேதை என்ற நினைவில்
மன்றங்கள் ஏறிநின்று வாய்கொழுத்து நாத்திகமே
மட்டின்றிப் பேசி அலைந்தேன்!
அருள்பிறங்கும் மறையேத்தும் ஆண்டவனை இல்லையென்றே
ஆர்ப்பரித்த பேதை இவனே!
அண்டரண்டம் எல்லாமும் ஆட்டுவிக்கும் கூத்தரசே!
ஆலமர்ந்த பரம சிவனே!
நாள்விளங்க எழுந்துவரும் ஞாயிற்றைப் பார்த்திந்த
நாய்குரைத்த குரைப்பும் குறைவோ?
நலம்விளங்க ஒளிபொழியும் நன்னிலவைப் பார்த்திந்த
நரியிட்ட ஊளை குறைவோ?
கோள்விளங்க ஓங்கிநிற்கும் கொடுமுடியைப் பார்த்திந்தக்
கூகையெள்ளி நகைத்த திலையோ?
கோவிளங்க முகில்வளர்க்கும் குரைகடலைப் பார்த்திந்தக்
கூன்புழுவும் சிரித்த திலையோ?
தோள்விளங்க மார்தட்டித் தொல்சமயம் இறைக்கொள்கை
`தூ’வென்ற பேதை இவனே!
துடிவிளங்க அண்டரண்டம் தொடர்ந்தாட்டும் கூத்தரசே!
துகளறுக்கும் பரம சிவனே!
முற்றாத சிற்றறிவு முகிழ்க்காத பிள்ளைமனம்
முதிராத சிறிய வயதில்
முற்றாகப் பொய்ந்நூல்கள் முப்போதும் கற்றறிந்து
முழுமூடன் ஆன பொழுதில்
வற்றாத உளைக்குழியாய் மனம்மாற ஆணவமும்
வந்தேறி நின்ற தருணம்
வரையின்றி நாத்தீக வாதங்கள் செய்துநல்லோர்
மனம்கீண்டு மகிழ்ந்த தருணம்
பற்றாத வழிபற்றிப் பரம்பொருளைச் சிலர்மறக்கப்
பாதைசொன்ன பேதை இவனே!
பந்தாக அண்டரண்டம் பார்த்தாட்டும் கூத்தரசே!
பாடகற்றும் பரம சிவனே!
அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அருஞ்சொல் விளக்கம்:
இருள்பிறங்கும் - இருள் மிகும்
அடவி - காடு
இமிழ்கடல் - ஓசை எழுப்பும் கடல், இமிழ் - ஓசை
மருள்பிறங்கும் - மயக்கம் மிகும், மருள் - மயக்கம், எது சரி, எது பிழை என அறிய இயலாமை
புல்லிய - இழிந்த, கீழான
அண்டரண்டம் - பேரண்டம், பிரபஞ்சம்
கூத்தரசு - நடராசர்
ஆலமர்ந்த - ஆலின்கீழ் அமர்ந்த, ஆல் - ஆலமரம்
கோள்விளங்க - வலிமை விளங்க, கோள் - வலிமை
கொடுமுடி - மலையுச்சி
கூகை - கோட்டான்
கோ - உலகு, நிலம், மண்
குரைகடல் - முழங்கும் கடல்
துடி - உடுக்கை
துகளறுக்கும் - குற்றத்தை நீக்கும் துகள் - குற்றம்
உளைக்குழி - சேற்றுக்குழி, உளை - சேறு
வரையின்றி - அளவின்றி, எல்லையின்றி, வரம்பின்றி, வரை - அளவு, எல்லை, வரம்பு
மனம்கீண்டு - மனம் கிழித்து, கீண்டல் - கிழித்தல்
பாடகற்றும் - கேடகற்றும், பாடு – கேடு
(தில்லித் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுமலருக்காக இவன் இயற்றிய பாடல்; முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மலரில் - `சுடர்' - வெளிவந்தது.)
Read more...

